மியான்மர்: மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் சென்ற ஆண்டு கலவரம் கலவரத்தில், ரோஹிங்கியா தீவிரவாதிகள் 99 இந்துக்களை படுகொலை செய்ததாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.
ராக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வந்தனர். இவர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. அரகன் ரோஹிங்கியா சால்வேஷன் ஆர்மி (ஏஆர்எஸ்ஏ) என்ற தீவிரவாத அமைப்பு ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏஆர்எஸ்ஏ அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் பெரும் கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் வீடுகள், சொத்துகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சுமார் 7 லட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறி, வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அங்கு முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் ஏஆர்எஸ்ஏ தீவிரவாத அமைப்புதான் கலவரத்துக்குக் காரணம் என மியான்மர் கூறி வந்தது.
இந்நிலையில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கலவரம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தியது. மேலும் கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதன் அடிப்படையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், 25 ஆகஸ்ட் 2017ம் தேதி ராக்கைன் மாகாணத்தின் வடக்கு மவுங்டாவுக்குட்பட்ட கா மவுங் சீக் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் மீது ஏஆர்எஸ்ஏ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். குறிப்பாக ஆண், பெண், குழந்தைகள் என மொத்தம் 69 பேரை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களைக் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
16 இந்துக்களை மதம் மாற்றிய தீவிரவாதிகள்:
கடத்தப்பட்ட 69 பேரில், 8 பெண்கள் மற்றும் 8 குழந்தைகள் முஸ்லிமாக மதம் மாற சம்மதித்ததால், போராளிகளை திருமணம் செய்யவேண்டும் என்னும் நிபந்தனையுடன் விடுவிக்க பட்டனர்.
பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 46 இந்துக்கள் காணாமல் போய் உள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கேட்டுக்கொண்டுள்ளது.