தூத்துக்குடி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான, தமிழக காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஸ்நோலின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவின்படி புதுவை ஜிப்மர் டாக்டர் அம்பிகா பிரசாத் பாத்ரா தலைமையிலான குழுவினரால் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி வரை நடந்தது. இதில் சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, காளியப்பன் ஆகியோரது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தமிழரசன் மற்றும் மாணவி ஸ்நோலின் உடல்களை வாங்க குடும்பத்தினர் மறுத்து வந்தனர். அவர்களிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
ஸ்டெர்லிட் ஆலையை நிரந்தமாக மூட சட்டசபையில் சட்டம் ஏற்றவேண்டும், போராட்டம் செய்தவர்களின் மீதான வழக்கை வாபஸ் செய்ய வேண்டும் மேலும் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான முந்தைய கலெக்டர், எஸ்பி மீது கொலை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என கூறி வந்தநிலையில், இன்று அரசின் சமரசத்தை ஏற்று உடலை பெற்று இன்று நல்லடக்கம் செய்தனர்.