சென்னை: தமிழகத்தில் அனைத்து தடிமன் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக உலக சூழல் தினமான இன்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது வரும் ஜனவரி 1ம் தேதி 2019 முதல் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கையில், மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன. பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. சேமித்து வைக்கவும் கூடாது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்த தடைக்கு பொது மக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here