மத்திய அரசால் தமிழகத்திற்கு காவேரியில் இழைக்க பட்ட துரோகத்தாலும், தமிழகத்தின் இயற்கை வளத்தை அழிக்கும் திட்டத்தை நிறைவேற்ற துடிப்பதாலும் இன்று தமிழகத்தின் மூலைமுடுக்கு எல்லாம் தமிழ் தேசியம் பேசப்படுகின்றது. ஆனால் இதற்கு எல்லாம் முன்னோடியாக பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு மக்கள் விடுதலைப் படை என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வந்தவர், தேனி அருகே உள்ள சீலையம்பட்டி. கிராமத்தைச் சேர்ந்த எம்.எஸ்சி. பட்டதாரியான ராஜாராம்.
தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக, தினமலர் அலுவலகத்தில் குண்டு வைத்தாக , தமிழ் பேசிய மாணவர்களை தண்டித்த சென்னை வேப்பேரியில் உள்ள செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் குண்டு வைத்தாக , மற்றும் சிதம்பரம் அண்ணாமலை காவல்நிலையத்தில் குண்டு வைத்தாக வழக்குகள் நிலுவையில் இருந்தால் இவர் டிசம்பர் 2002இல் கைது செய்யப்பட்டார்.
25.03.2003 அன்று திரு ராஜாராம் அவர்கள் சென்னை மத்திய சிறையிலிருந்து சைதாப்பேட்டையில் உள்ள 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நீதிபதி முன்னிலையில் ராஜாராம், தனது உயிருக்கு ஆபத்து என்றும், காவல்துறையினர் தன்னைச் சுட்டுக் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும், தன் உயிருக்கு பாதுகாப்பு தருமாறும் கோரிகை விடுத்தார். ஆனால் அந்த நீதிபதி அவரது கோரிக்கையை ஏற்காமல், ராஜாராமை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சென்னை மத்திய சிறைக்கு வழக்கமாக செல்லும் வழியிலிருந்து மாறி கோட்டூர்புரம் பாலம் வழியாக ராஜராமை காவல்துறையினர் அழைத்துச் சென்றார்களாம். அப்போது வாகனம் கோட்டூர்புரம் ஐந்தாவது தெரு அருகே வந்த போது வாகனம் பஞ்சர் ஆகி விட்டதாம். உடனே ராஜாராமை வேறு வாகனத்தில் மாற்றி ஏற்றுவதற்கு முயன்ற போது, வெள்ளை நிறத்தில் ஒரு டாடா குவாலிஸ் கார் அங்கே வந்ததாம். அதிலிருந்து ஒரு இளைஞன் இறங்கி காவல்துறையினரை நோக்கி சுட்டானாம். அப்போது உதவி ஆணையர் கலியமூர்த்தி, ஆய்வாளர் ராஜாமணி ஆகியோர் காயமடைந்தார்களாம். இந்தச் சம்பவத்தை பயன்படுத்தி ராஜாராம் காவல்துறையினர் வாகனத்திலிருந்து இறங்கி தப்பியோட முனைந்தாராம். அப்போது குவாலிஸ் வாகனத்திலிருந்தவர்கள் சுட்டதில் ராஜாராம் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலயே இறந்து விட்டாராம். போலீசார் திருப்பிச் சுட்டதில் ராஜாராமைச் சுட்ட சரவணன் என்பவர் இறந்து விட்டாராம். காவல்துறை நடத்திய விசாரணையில் சரவணன் தமிழ்நாடு மீட்சிப்படையைச் சேர்ந்த தீவிரவாதி என்பது தெரியவந்ததாம். இதுதான் அப்போதைய சென்னை மாநகர ஆணையாளராக இருந்த திரிபாதி சொன்ன கதை.
இவரின் கதை, சினிமாவில் வரும் திரைக்கதை போல் விறுவிறுப்பாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள பள்ளி குழந்தைகள் கூட இந்த கதையை கேட்டு சிரிக்கிறது.