திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் வெள்ளியகரம். இந்த ஊரில் 280 மாணவர்கள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராக கோபிந்த் பகவான் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றுகிறரர். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வந்தார். ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள், ஆசிரியரின் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு ஆர்வமுடன் படித்தனர்.

சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் நடந்தது. அதில் ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகில் உள்ள அருங்குளத்துக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது .நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத பகவான் உத்தரவை வாங்க அலுவலகம் சென்றிருந்தார். ஆசிரியர் வராததைக் கண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளியை அணுகிக் கேட்டபோது பகவானுக்கு இடமாறுதல் கிடைத்தது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைத்த மாணவர்கள் நேற்று பெற்றோருடன் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளியையும் பூட்டினர்.

 

அந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்த பகவானை மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். ஆசிரியரை மாற்றக் கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்த்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உறுதி செய்தார். இது மாணவர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here