18 எம்.எல்.ஏ வழக்கில் மூன்றவது நீதிபதியாக நேர்மையான நீதிபதி என்று பெயர் எடுத்த, அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி சத்யநாராயணாவை நியமித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரிய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரது தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கின் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். அதாவது 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு வழங்கினர்.
இதனால் இந்த வழக்கு 3-வது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக, நீதிபதி விமலா அறிவிக்கப்பட்டார். இதற்கிடையே, ‘இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்தால் காலதாமதமாகும் என்றும், இதனால் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் தங்க தமிழ்ச்செல்வனை தவிர மற்ற 17 பேர் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும், நீதிபதி விமலா மீது சில குற்றச்சாட்டு இருப்பதாகவும் வாதாடினார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மூன்றவது நீதிபதியாக திரு சத்யநாராயணாவை நியமித்துள்ளது. மேலும் நீதிபதி விமலா மீதான குற்றச்சாடை திரும்ப பெற வலியுறுத்தியது. மேலும் உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.