திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் புகழ் பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலின் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை ஆண்டவன் உத்தரவு என்ற அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும் படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை நேரடியாக அணுகி தனது கனவில் ஆண்டவன் கூறிய அந்த பொருளை பற்றி கூறுவார்.
கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் வைத்து சிவப்பு, வெள்ளை நிறத்தினால் ஆன இரண்டு பூக்கள் வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் ஏற்றுக்கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பொருள் அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்படும். அந்த பொருளுக்கு தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜை செய்யப்படும். இது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இவ்வாறு கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் என்பது எதுவும் கிடையாது. மற்றொரு பக்தரின் கனவில் முருகன் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில் பழைய பொருளே அந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் உலகில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் இதற்கு முன்பு இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் துப்பாக்கி, இரும்புச் சங்கிலி, உலக உருண்டை,கணக்கு நோட்டு போன்ற பல பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், திருவண்ணாமலையை சேர்ந்த கென்னடி என்பவருடைய கனவில் வந்த முருகன் அம்பை சிவன்மலை கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கும்படி கூறியுள்ளார். அதை தொடர்ந்து கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெறப்பட்டு தாமிரத்தால் செய்யப்பட்ட அம்பு ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டு உள்ளது.
கடந்தாண்டு இரும்புச் சங்கிலி வைத்து பூஜை செய்யுமாறு ஒரு பக்தரின் கனவில் வந்து இருந்தது. அதன்படி பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறைக்கு சென்றார். இதேபோல் கடந்த ஜனவரி மாதம் உலக உருண்டை வைத்து பூஜிக்கப்பட்டது. அப்போது, கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டு நீங்கியது.