கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக, பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது 304(2) பிரிவின் கீழ் பதியப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மாணவி லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக போதுமான முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே வலைகட்டி குதிக்கும் பயிற்சியின்போது, பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துவந்த, லோகேஷ்வரி என்ற மாணவி எதிர்பாராத விதமாக, உயிரிழந்தார். பயிற்சியாளர் ஆறுமுகம் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டதால்தான் மாணவி உயிர் பறிபோனது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். கல்லூரி மீதும், பயிற்சியாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.