திருச்சி: கடுமையாக நடந்து ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமான காவல்துறையை கடுமையாக விமர்சித்த இளைஞரை ஒருவரை பல மாதங்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தி திருச்சி காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி இரவு திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த ராஜாவின் வாகனத்தை ஆய்வாளர் நிறுத்தியுள்ளார். அந்த வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து பின்னால் ஆய்வாளர் விரட்டிச்சென்று பெல் ரவுண்டானா அருகில் அந்த வாகனத்தை எட்டி உதைத்தார். அதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்னால் அமர்ந்திருந்த ராஜாவின் மனைவி உஷா, கீழே விழுந்து உயிரிழந்தார். கர்ப்பிணியான உஷா உயிரிழந்தை தொடர்ந்து அவரது உறவினர்கள், காவல்துறையை கண்டித்து பெல் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து நள்ளிரவாகியும் கூட்டம் கலையாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
காவல்துறையின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த, சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலையடுத்த நெடுங்குளத்தை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் காவல்துறையை கடுமையாக விமர்சித்து பேசும் வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சங்கரலிங்கம் மீது கடந்த மார்ச் 21ஆம் தேதியன்று, திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததின் பேரில், சுந்தரலிங்கத்தை இந்தியா கொண்டுவர இந்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. இதனைத்தொடர்ந்து சுந்தரலிங்கத்தை குவைத் அரசு இந்தியாவிற்கு நாடு கடத்தியது. திருவனந்தபுரம் வந்த அவரை விமானநிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண்ணின் மரணத்திற்கு காரணமான காவலர் ஜாமீனில் சுகந்திரமாக இருக்கின்றார். ஆனால் அதை விமர்ச்சித்தவர் மட்டும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.