ஸ்கார்ட்லேண்ட் யார்டு போலீசுக்கு இணையாக தன்னை கூறிக்கொள்ளும் தமிழக காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஆட்டு கறியை மிரட்டி பிச்சை கேட்டு முதியவரை தாக்கி காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார்.
சேலம் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணி உள்ளிட்ட 3 காவலர்கள், 13-01-2019ஆம் தேதி காவல்நிலையம் அருகில் உள்ள மூக்குத்திக்கவுண்டர் என்பவரின் ஆட்டுக்கறிகடைக்குச் சென்று இலவசமாக 2 கிலோ ஆட்டுக்கறியை கேட்டுள்ளனர் அதற்க்கு கடைக்காரர் போனவாரம் தானே இலவசமாக கொடுத்தேன் இது போன்று வாரம் வாரம் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு, கடையிலே இழுத்துப்போட்டு அடித்ததுடன் வழுக்கட்டாயமாக காவல்நிலையம் அழைத்து சென்று அந்த முதியவரை தாக்கியுள்ளனர்.
இதையறிந்து காவல்நிலையத்திற்கு சென்ற மூக்குத்தி கவுண்டரின் மகன் விஜயகுமாரையும் போலீசார் காதில் இரத்தம் வரும் வரை அடித்து தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த மூக்குத்தி கவுண்டர், விஜயகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவபெருமாள் ஆகியோர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டனர்.
இதுதான் நீதியா?
காவல் துறையினரை யாராவது தாக்கினால், அவர்கள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள் அல்லது காவல்நிலையத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்து கைகால் உடைத்துக்கொள்கிறார்கள். ஆனால் கறியை இலவசமாக கேட்டு முதியவரை கொடூரமாக தாக்கியவர்களுக்கு வெறும் இடமாற்றம் தான் தண்டனையா? இவர்களை போன்றோரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்தால் தான் பொதுமக்களிடம் கையேந்தும் காவலர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.