தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களை நடிகர் ரஜினி, நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்தபோது, ரஜினியைப் பார்த்து, “நீங்க யாரு” என்று கேட்ட சந்தோஷ் தற்போது, கலவரத்தைத் தூண்டும் விதமாக துண்டுப்பிரசுரம் விநியோகிக்கத் தூண்டியதாக, கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த டிசம்பர் 19-ம் தேதி பிற்பகலில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பத்மநாபமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி பகுதியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என துண்டுப்பிரசுரத்தை விநியோகம் செய்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தமூன்று பேரை கலவரத்தைத் தூண்டும் விதமாக துண்டுப்பிரசுரம் விநியோகிக்கத் தூண்டியதாக, தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை புதூர்பாண்டியாபுரம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் போலீஸார் 153 ஏ(பி), 505 (1)(பி) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் கைதுசெய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சந்தோஷ் கைதுசெய்யப்பட்ட தகவல் அறிந்த கிராம மக்கள், கிராமத்தில் உள்ள கோயில் மணியை அடித்தும், ஒலிபெருக்கியாலும் கிராமமக்களுக்கு அறிவித்தனர், கோயில் முன்பு திரண்ட கிராம மக்கள், சந்தோஷை கைதுசெய்ததைக் கண்டித்தும், விடுதலைசெய்ய வலியுறுத்தியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிராமத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.