திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் வரையுள்ள 244 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்கப்படும் என மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்ப்பதாக அதிமுக அமைச்சர் காமராஜ் கூறினாலும், இந்த திட்டத்திக்கு ஆதரவாக தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன் பேசியதையும் மற்றும் ஓஎன்ஜிசிக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டதையும் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அம்பலப்படுத்திருந்தார்..
இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களாக திருக்காரவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட திருக்காரவாசல் கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என முதலமைச்சர் உறுதி அளிக்க வேண்டும் மேலும் காவேரி படுக்கையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும் அதுவரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.