கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வேலைக்கு ஆட்களை கூட்டி செல்வது வழக்கம்

நேற்று காலை வேலைக்கு ஆட்களை கூட்டிச்செல்ல அந்த குடியிருப்புக்கு வந்து இருக்கின்றார். அப்போது அங்கு வந்த சிலர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் ராமலிங்கத்தையும் மதம் மாறுமாறு கூறியதாக கூறப்படுகிறது.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட ராமலிங்கம் மதம் மாறும் மாறு கூறியவர்கள் அணிந்திருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் வைத்துக் கொண்டார். மேலும் தன் வசம் வைத்திருந்த விபூதியை அவர்கள் இருவருக்கும் பூசிவிட்டடார். இதனால் இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமலிங்கம் உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தஞ்சை செல்லும் வழியிலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். மதமாற்றத்தை தட்டிக்கேட்ட ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலால் கும்பகோணத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இதனை அடுத்து தஞ்சை, நாகை, அரியலூர் மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் ஐ.ஜி தலைமையில் போலீசார் கும்பகோணம், திருபுவனம் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here