ஆந்திராவின் முன்னாள் கவர்னர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தற்போது ரோஹித்தின் மனைவியும், உச்சநீதி மன்றத்தின் வழக்கறிஞருமான அபூர்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண இணையத்தளம் மூலம் அபூர்வா மற்றும் ரோஹித் அறிமுகம் ஆனார்கள். ஒரு வருடம் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்த்த இவர்கள், கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்கும் இடையே சண்டை காரணமாக சில காலம் தன் தாய் வீட்டில் வசித்த அபூர்வா, கடந்த மார்ச் 30ம் தேதி வீடு திரும்பினார். மேலும் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட தினத்தன்று மது போதையில் தூங்கிய ரோஹித்தை தலையணை வைத்து அமுக்கி கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அருகில் உள்ள ரோஹித்தின் சொத்திற்காக தான் தன் மகனை, அபூர்வா மற்றும் அவரின் குடும்பத்தினர் கொலை செய்ததாக ரோஹித்தின் தாய் குற்றம் சாட்டி உள்ளார்.
என்.டி.திவாரி தனது தந்தை என்பதை நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு மரபணு சோதனை மூலம் ரோஹித் திவாரி நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகே ரோஹித்தின் தாயை தனது 88ஆம் வயதில் திருமணம் செய்துக்கொண்டார் என்.டி.திவாரி.