தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). விவசாயி. நடராஜன் ‘பப்பி’ என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். தங்கள் குடும்பத்தில் ஒருவராக ‘பப்பி’யின் மீது பாசம் காட்டி நடராஜனும், அவரது குடும்பத்தினரும் வளர்த்து வந்தனர்.

கடிக்க வந்த நல்ல பாம்பு :

நடராஜன் தினமும் காலையில் தனது தோட்டத்தில் நடைபயிற்சி செல்லும்போது நாய்யையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் அவர் தோட்டத்தில் நடைபயிற்சி சென்ற போது, நடராஜனுக்கு பின்னால் ‘பப்பி’ வந்து கொண்டிருந்தது. வயல் வரப்பில் சென்றபோது 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வேகமாக ஊர்ந்து நடராஜனுக்கு முன்னால் வந்து அவரை கடிப்பதற்காக சீறியது.

இதைப்பார்த்த நாய் ‘பப்பி’  பாம்பை கடித்தது. இதனால் நாய்க்கும், பாம்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. உடனடியாக நடராஜன் ஒரு கம்பை எடுத்து பாம்பை அடித்து கொல்வதற்காக ஓடி வந்தார்.

உயிர் தியாகம்

தொடர்ந்து நாயிடம் சண்டை போட முடியாத பாம்பு முட்புதருக்குள் சென்றது. ஆனால் அதை விடாமல் நாய் விரட்டி சென்று கடித்து குதறியது. நாய் கடித்து குதறியதால் பாம்பு இறந்தது.

தன்னை கடிக்க வந்த பாம்பை, நாய் கடித்து குதறி கொன்றதை பார்த்த நடராஜன், நாயை கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார். பாம்பு கடித்து இருந்ததால் நாய் மிகவும் சோர்ந்து போய் இருந்தது. இதனையடுத்து நடராஜனின் குடும்பத்தினர், கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் கால்நடை மருத்துவர் வருவதற்கு முன்பாக பாம்பின் விஷம் நாய் உடம்பு முழுவதும் பரவியதால் சிறிது நேரத்தில் கீழே விழுந்து நாயும் இறந்து விட்டது. தனது உயிரை காப்பாற்றிய நாய் இறந்து விட்டதே என நடராஜனும், அவரது குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் குழி தோண்டி இறந்த நாயையும், பாம்பையும் புதைத்தனர்.

எஜமானரை காப்பாற்ற தனது உயிரை கொடுத்த நாயின் நன்றியை எண்ணி அப்பகுதி மக்கள் பெருமிதம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here