அறந்தாங்கி: ஸ்கார்ட்லண்ட் யார்ட் போலீஸ்க்கு நிகராக தன்னை கூறிக்கொள்ளும் தமிழக காவல்துறையை சேர்த்த இரு காவலர்கள் மது அருந்துவதற்காக தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்களைத் திருடும் விடியோ வைரல் ஆகப் பரவி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் கோடை காலத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்காக, ஊர் இளைஞர்கள் சார்பில் தண்ணீர் பந்தல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அங்கு வைக்கப்படும் டம்ளர்கள் தொடந்து காணாமல் போயின.
இதை கண்டுபிடிப்பதற்காக, சிசிடிவி கேமரா வெள்ளிக்கிழமையன்று அமைக்கப்பட்டது. அந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டம்ளர்களை இரவு ரோந்து பணியில் இருக்கும் இரண்டு போலீசார் எடுத்து செல்லும் காட்சி, சிசிடிவி. கேமிராவில் பதிவாகி இருந்தது.
விசாரணையில் அவர்கள் கீரமங்கலம் காவல் நிலையதில் பணியாற்றும் காவலர் ஐயப்பன் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த வடிவழகன் என்பது தெரிய வந்தது.
அந்த சிசிடிவி காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.