சித்திரை மாதம் ரோகினி  நட்சத்திரமான இன்று(07/05/2019), அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியாருக்கு சைவ திருக்கோவில்களில் குரு புஜை விமர்சையாக கொண்டாடபட இருக்கிறது. சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின் பற்றிய ஒருசிலரில் மங்கையர்கரசியாரும் ஒருவர்.

சமண மதமாற்றம்:
பாண்டிய மன்னன் சமண சமயத்தைச் தழுவினான். மக்களும் மன்னரை பின்பற்றி சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் அமைச்சர் மட்டும் சைவ சமயத்தை சார்த்திருந்தார்.

ஞானசம்பந்தர் வருகை:
திருமறைக்காட்டிற்கு(வேதாரண்யம்) ஞானசம்பந்தர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட மங்கையர்கரசியார், அமைச்சர் குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானை பாண்டிநாட்டுக்கு அழைத்துவரச் செய்தார்.

மதுரையில் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீவைத்தனர் சமணர்கள்.  இந்நிலையிலே மன்னனுக்கு வெப்புநோய் பற்றியது. மருத்துவராலும் சமண துறவிகளின் மந்திரத்தாலும் வெப்புநோய் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார் மங்கையர்கரசியார். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. திருஞானசம்பந்தர் பொருட்டு வைத்த தீயே வெப்புநோயாக மன்னனை வருத்துகின்றது என்று எண்ணிய மங்கையர்கரசியார், “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார்.

திருஞான சம்பந்தரின்,  “மந்திரமாவது நீறு”  என தொடங்கும் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. மேலும் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் திருஞான சம்பந்தர் வென்றார். போட்டியில் தோற்ற சமணர்கள் கழுவேறினர். இதை கண்டு பாண்டிய நாட்டு மக்கள் அனைவரும் திருநீறு பூசி சைவராயினர்.

பாண்டியநாட்டில் சைவம் தலைதொங்க காரணமாய் இருந்த மங்கையற்கரசியார், நெடுங்காலம் சைவத்திற்கு தொண்டாற்றி மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.

தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணதில் மங்கையர்க்கரசி அம்மையாரை பற்றி பாடும் பொழுது,

மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
   வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
    தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
   இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
   போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.

என பாடுகின்றார்.

இந்த பாடலுக்கான விளக்கம்:
மங்கையர்க்கு எல்லாம் ஒப்பில்லாத பேரரசியும், எம் தெய்வமும், சோழரின் குலக்கொழுந்தாக விளங்குபவரும், வளையலை அணிந்த பெருமையுடையவரும், செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளைப் போன்றவரும், பாண்டி நாட்டை ஆளும் பாண்டியரின் குலத்திற்கு உண்டான பழியைப் போக்கிய தெய்வத் தன்மையுடைய பாவைபோல் பவரும், எங்களுடைய பெருமானாரான சீகாழித் தலைவரின் அருளால் பெரிய தமிழ் நாட்டிற்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி, மேலோங்கிய ஒளியைத் தரும் நீருநீற்றைப் பரவச் செய்தவருமான மங்கையர்க்கரசியாரைப் போற்றுபவரின் திருவடிகள் எம்மால் போற்றத்தகுவதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here