கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்த கல்லூரி மனைவி திலகவதி விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
திலகவதியுடன் பள்ளியில் ஓன்றாக படித்த ஆகாஷ் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தீவிர ஆதரவாளர். இவர் திலகவாதியை ஒருதலையாக காதலித்து வந்தார். தனது காதலை ஏற்காத திலகவாதியை, வீட்டில் தனியாக இருந்த பொழுது வீட்டிற்குள் புகுந்து கொலை செய்தார் ஆகாஷ்.
இருவரும் வெவ்வேறு சாதியை சேர்த்தவர்கள். கொலை செய்தவர் தலித் என்பதால் அரசியல் கட்சிகள் கண்டுக்கொள்ளவில்லை என சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. தற்போது இந்த படுகொலையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி நேற்று மாலை அவரது வீட்டில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட அந்த மனித மிருகத்தை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இந்த கொலைக் குற்றவாளிக்கு பின்னால் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அந்த கிராமத்தில் இருந்து வருகிறார்கள், அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உறுதுணையாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வழக்கறிஞர் அணி இருக்கும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் மேலும் இனி எக்காலத்திலும் இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என்று கடுமையான எச்சரிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.