காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையும் மாலையும் வரதராஜப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றார்.
பெருமாள் காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பித் தெருவினில் உள்ள மண்டபத்தில் வேடுபறி என்ற நிகழ்ச்சிக்காக எழுந்தருளினார். அங்கு தென்கலை பிரிவினர் தமிழில் பாசுரம் பாட முயற்சி செய்தனர். அங்கிருந்த வடகலை பிரிவினர் அவர்கள் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவித்து கைகலப்பில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பினரிடையே போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கடந்தாண்டும் இதே பிரச்சனையால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது குறிப்பிட தக்கது. பெருமாளை வணக்கும் ஐயங்கார் சாதியில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவு இருக்கிறது. தென்கலை பிரிவினர் நாமத்தை நன்கு நெற்றிக்கு கீழ் வரை இழுத்து போட்டு இருப்பார்கள். வடகலை ஐயங்கார்கள், கோவிலில் சமஸ்கிருத வேத பாடல்களை பாடுவார்கள். தென்கலை ஐயங்கார்கள் தமிழில் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்யப் பிரபந்த பாடல்களை பாடி பெருமாளை வழிபடுவார்கள்.