கர்நாடக மாநிலம் கோலார் சுரங்கத்திலிருந்து விரத்தியடிக்கப்பட்டு, இந்தியாவின் அணுக்கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக கூடங்குளத்தை மாற்ற இருக்கின்றது மத்திய அரசு. தமிழகத்தின் மீது அக்கறையில்லாத தமிழக ஆட்சியாளர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. இந்த அணு கழிவுகளை இன்னும் 10,000 ஆண்டுகளுக்காவது பராமரிக்க வேண்டும் தவறும் பட்சத்தில் இந்த பகுதி ஜப்பானின் ஃபுகுஷிமா போல் இந்த பகுதியும் மாறும் என்பதில் எந்த எந்த ஐயமும் இல்லை.
கூடங்குளம் அணுமின் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்துவரும் உதயக்குமார் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மதியம் நடந்தது என்ன? இதையெல்லாம் எங்கேப் போய் சொல்ல?
கூடங்குளம் அணுக்கழிவுக் கிட்டங்கிப் பிரச்சினை தொடர்பாக ஒரு கலந்தாலோசனை நடத்த கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி பகுதி தோழர்கள் சிலரும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட செயல்பாட்டாளர்கள் சிலரும் இன்று (யூன் 11, 2019) மதியம் 3 மணிக்கு நெல்லையில் கூடிப் பேசுவது என்று திட்டமிட்டிருந்தோம்.
நேற்றிலிருந்தே காவல்துறை அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் என்ன செய்யப் போகிறீர்கள், அதைவிட முக்கியமாக எந்த இடத்தில் கூடப் போகிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். இவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டத்துக்கு அனுமதி தர மாட்டார்கள். அரங்கக் கூட்டம் ஒன்று நடத்தினால், அரங்க உரிமையாளரை மிரட்டி, அதட்டி அதையும் நடத்த விடமாட்டார்கள். எனவே நாங்கள் அரங்க விபரங்களை யாருக்கும் சொல்லாமல், நெல்லை புதியப் பேருந்து நிலையத்துக்கு அனைவரும் வாருங்கள், அங்கிருந்து கூட்ட அரங்கிற்குச் செல்லலாம் என்று தோழர்களிடம் தெரிவித்திருந்தோம்.
கடுமையான சளி, காய்ச்சலால் துன்புற்றாலும், அதைப் பொருட்படுத்தாது மதியம் 1 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் புறப்பட்டு தனியாக நெல்லைக்குச் சென்றேன். போகும் வழியிலேயே எனது நலம் விரும்பிகள் ஒரு சிலர் என்னை அழைத்து, “பேருந்து நிலையத்தில் ஏராளமான போலிஸ் குவிக்கப்பட்டிருக்கிறது; உங்களைக் கைது செய்வதுதான் திட்டம்; எனவே கவனமாக இருங்கள்” என்று எச்சரித்தார்கள்.
நெல்லை நகருக்குள் பேருந்து நுழையும் முன்னரே ஒரு நிறுத்தத்தில் நான் இறங்கிவிட்டு, நண்பர்களுக்குத் தகவல் கொடுத்தேன். அவர்களோடு கூட்டம் நடக்கும் இடத்தருகே சென்றால், அங்கேயும் போலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. எனவே காரிலிருந்தபடியே கலந்தாலோசனையில் பங்கேற்றுவிட்டு ஊருக்குத் திரும்பினேன்.
இதே போல, கடந்த மே 21-22, 2019 அன்றும் ஸ்டெர்லைட் ஈகியர் நினைவேந்தலுக்காக நான் தூத்துக்குடிக்குச் செல்லவிருந்த நிலையில் வீட்டுக் காவல், கைது என்று காவல்துறையினர் அத்துமீறினார்கள்.
இந்தியா ஒரு சனநாயக நாடு என்பதையும், இங்கே கூடுவதற்கும், பேசுவதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகளுக்கு யாராவது சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பாசிஸ்டுகள் ஆள்வதற்கும் பணக்காரர்கள் வாழ்வதற்கும் மட்டும் ஏவல், எடுபிடி வேலைகள் செய்வதுதான் தங்கள் கடமை என்று காவல்துறை, உளவுத்துறையினர் உறுதியாக எண்ணுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்த அடக்குமுறைகளை, அநியாயங்களை எதிர்த்தால், முகிலனைப் போல் காணாமல் போவோம்; அல்லது கவுரி லங்கேஷ் போல சுட்டுக்கொல்லப்படுவோம்.
ஜெர்மனி நாட்டு லுத்தரன் பாஸ்டர் மார்ட்டின் நிமொய்லர் (Martin Niemöller; 1892–1984) சொன்னது நினைவுக்கு வருகிறது.
முதலில் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
காரணம் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல.
பின்னர் சோசலிஸ்டுகளைப் பிடிக்க வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
காரணம் நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல.
பின்னர் தொழிற்சங்கவாதிகளைப் பிடிக்க வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
காரணம் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல.
பின்னர் யூதர்களைப் பிடிக்க வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை
காரணம் நான் ஒரு யூதர் அல்ல.
பின்னர் என்னைப் பிடிக்க வந்தார்கள்
எனக்காகப் பேசுவதற்கு
யாருமே அங்கே இருக்கவில்லை.
First they came for the Communists
And I did not speak out
Because I was not a Communist
Then they came for the Socialists
And I did not speak out
Because I was not a Socialist
Then they came for the trade unionists
And I did not speak out
Because I was not a trade unionist
Then they came for the Jews
And I did not speak out
Because I was not a Jew
Then they came for me
And there was no one left
To speak out for me
இப்படி ஒரு நிலைமை நம்மில் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே உங்களிடம் இதையெல்லாம் சொல்கிறேன். தனிப்பட்ட முறையில், எனது குடிமை உரிமைகளை மறுக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனம் பணித்திருக்கும் எனது கடமைகளைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறார்கள். நான் அச்சமின்றி வாழமுடியாத நிலைமையை உருவாக்குகிறார்கள். எனவே,
- நான் இந்தியக் குடியரசுத் தலைவரிடமும், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களிடமும் கடிதம் மூலமாக முறையிடுவேன்.
- மனித உரிமைகள் போற்றும் இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமும் கடிதம் மூலமாக முறையிடுவேன்.
- இந்திய அரசியல் சாசனத்தின் “பகுதி IVA (ஷரத்து 51A) அடிப்படைக் கடமைகள்” பகுதியை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி எனது கடமைகளைச் செய்வது எந்தப் பிரிவின்கீழ் குற்றமாகிறது என்று நியாயம் கேட்பேன்.
அன்புடன்,
சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்,
என்று தெரிவித்துள்ளார்.