21 ஏப்ரல் 2024

வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்: தமிழ்நாட்டில் பிகார், ஜார்க்கண்ட் அரசு குழுக்கள் – கள நிலவரம்

1 min read

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்படுவதாகவும் கொலை செய்யப்படுவதாகவும் பரவிய வைரல் காணொளிகளால் வெளி மாநில தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் வேலை செய்யும் தங்கள் மாநில தொழிலாளர்களை சந்திக்க பிகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் தமிழ்நாடு வந்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் போலியானவை என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் அதனைப் பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை தரப்பில் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மத்தியில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அச்சத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. ஆனால் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இதனை முற்றிலுமாக மறுத்து விட்டன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் பிகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் பற்றி ஆராயவும் சமீபத்திய பதற்றமான சூழலைத் தணிக்கவும், உரிய விசாரணை நடத்தவும் ஒத்துழைப்பு வழங்க பிகார் அரசு உயர்நிலை குழு ஒன்றை அமைத்திருந்தது. பிகார் அரசை போல ஜார்க்கண்ட் அரசும் உயர்நிலை குழு ஒன்றை அமைத்தது.

தற்போது பிகார் மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் சார்பில் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்நிலை குழுக்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளன. பிகார் அரசு உயர்நிலை குழுவில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், பிகார் சி.ஐ.டி காவல்துறை தலைவர் கண்ணன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஜார்க்கண்ட் அரசின் உயர்நிலை குழுவில் ஜார்க்கண்ட் சி.ஐ.டி காவல்துறை துணை தலைவர் தமிழ்வாணன், துணை காவல் கண்காணிப்பாளர் ஷம்ஷட் ஷம்சி, இணை தொழிலாளர் ஆணையர் ராகேஷ், தொழிலாளர் கண்காணிப்பாளர் அபிஷேக் வர்மா மற்றும் எஸ்.ஆர்.எம்.ஐ பிரதிநிதி ஆகாஷ் குமார், ஜார்கண்ட் மாநில புலம்பெயந்தோர் கட்டுப்பாட்டு அறையின் பிரதிநிதி ஷிகா லக்ரா ஆகியோர் உள்ளனர்.

நேற்று திருப்பூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், பிகார் மாநில தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுடன் உரையாடி ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தொழிற்துறையினர் மற்றும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் வருவாய் அலுவலர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக தவறான வீடியோ பதிவுகளை நீக்க ட்விட்டர் மற்றும் யூ-ட்யூப் நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டுள்ளன. மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதற்றமான செய்தியை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க போலியான வீடியோக்களைப் பதிவிட்ட யூ-ட்யூப் சேனல்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரிகள் பிகாருக்குச் சென்று விசாரணை நடத்தவும் உள்ளனர்” என்றார்.

அதனைத் தொடர்ந்து கோவையிலும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து வட மாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர். அதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் கூட்டமைப்பினர் மற்றும் தொழிற்சங்கங்கள் உடன் கலந்துரையாடல் நடத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிகார் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பாலமுருகன், “தமிழ்நாட்டில் பிகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் பரவின. இதனால் பிகார் மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கவும், இங்குள்ள நிலைமையை ஆராயவும் பிகார் அரசு சார்பில் நான்கு அதிகாரிகள் அடங்கிய குழுவாக நாங்கள் வந்துள்ளோம். தொழிலாளர்களைச் சந்தித்து பேசினோம். தொழிற்துறையினரைச் சந்தித்து பேசினோம்.

தமிழ்நாடு காவல்துறை வட மாநில தொழிலாளர்களுக்கென உதவி எண் மற்றும் தனிப் பிரிவு போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளனர். பிகார் தொழிலாளர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டிய விஷயங்களையும் கேட்டுள்ளோம். இங்கு அவர்களுக்கு உள்ள வசதிகள் நிறைவாகவே உள்ளன. தமிழக அரசும் காவல்துறையும் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்த வதந்திகளைப் பரப்பியவர்கள் பற்றிய விசாரணைக்கு தேவையான உதவியும் ஒத்துழைப்பும் பிகார் அரசு சார்பில் வழங்கப்படும்,” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்ட் அமைப்பின் ஜேம்ஸ், “வட மாநில தொழிலாளர்கள் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் பற்றி முறையான தகவல்கள் இல்லை. 40 – 50% வரை வடமாநில தொழிலாளர்கள் தான் உள்ளனர்.

அவர்களுக்கு ஊதியம் குறைவு என்பதில் உண்மை இல்லை. முதலில் வருகின்றபோது பெரிய அளவில் திறன் இருக்காது. ஒரு சில வருடங்களில் தொழிலுக்கு தேவையான திறனைக் கற்றுக் கொண்ட பின் ஊதியம் சரியான அளவில் பெறுவார்கள்.

வட மாநில தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்துவது காவல்துறைக்கும் தொழில்துறைக்கும் கடுமையான பணி. தற்போதைக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் உதவியுடன் அந்தப் பணியை மேற்கொள்ளலாம்,” என்கிறார்.

பிகார் மாநில அரசின் உயர்நிலை குழுவினரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசின் உயர்நிலை குழுவினரும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக வெள்ளகோவில், வீரபாண்டி, உடுமலைப்பேட்டை, பல்லடம் மற்றும் அவிநாசி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்கள். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஜார்க்கண்ட் அரசின் உயர்நிலை குழுவினர் திருப்பூர் மற்றும் கோவையில் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.